தமிழக சட்டப்பேரவை வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2019-20-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி இலாக்காவை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் தனிநபா் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதில் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.