தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. தமிழக நிதியமைச்சராக உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 10.30 மணியளவில் பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், தங்களது தனி அமைப்பிற்கான பெயரை அறிவித்து கொடியை ஏற்றிவைக்கிறார் தினகரன். அதற்கான பொதுக்கூட்டம் மேலூரில் தொடங்கியது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சி ஆகியவற்றை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை அரசியல் செய்வதற்கு தங்களது அணிக்கு அரசியல் ரீதியான அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்த தினகரன், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மூன்று கட்சி பெயர்களை வழங்கி, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறும் கோரினார். 

தினகரனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில், மேலூரில் தினகரன் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் இயக்கத்தின் பெயரை அறிவித்து கொடியை ஏற்றுகிறார் தினகரன்.

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதை நீர்த்து போக செய்யும் விதமாக, அதற்கு முன்னதாக இயக்கத்தின் பெயரை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருபுறம் பட்ஜெட்.. மறுபுறம் தினகரனின் புதிய இயக்கம் என தமிழக அரசியல் களைகட்டுகிறது.