ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் உரையை வாசித்த ஓபிஎஸ் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.