தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை  நடத்தி காட்ட தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். 

பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும்.தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். 

பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். 

மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது' என்று கூறினார். இந்நிலையில்,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டத் தயாராக இருக்கிறது' என்று அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

இதையும் படிங்க : CBI Raid in Kerala CM's House : சரிதா நாயர் பாலியல் புகார்.. முதலமைச்சர் வீட்டில் நுழைந்த சிபிஐ.! பரபரப்பு.!