விநாயகர் மேல் கல்லெறியப்பட்டால் ஒவ்வொரு இந்துவின் கையும் சும்மா இருக்காது என்றும் இனிமேல் இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் நெல்லை பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாக பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

 

இந்த ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட தெருவில் செல்லக் கூடாது என்று விநாயகர் ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால், விநாயகர் ஊர்வலத்தை தலைமையேற்று வழி நடத்திய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளைக் கொண்டு பேசியிருந்தார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தன. இதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக கூறி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜகவால் இன்று நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

இனிமேல் இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், விநாயகர் மேல் கல்லெறியப்பட்டால் ஒவ்வொரு இந்துவின் கையும் சும்மா இருக்காது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன் என்றும் பேசினார். வன்முறைக்காக கைது செய்யப்பட்ட இந்துக்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழிசை சௌந்தரராஜன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தியிடம் நேரில் வலியுறுத்தினார்.

செங்கோட்டையில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்ள முயற்சி செய்தால் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.