தமிழக பாஜக தலைவர் பதவி தனக்கு தான் என்று கூறி டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் வீசிய கை வெறும் கையாக தமிழகம் திரும்பியுள்ளார்.

அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு உடனடியாக ராமநாதபுரத்தில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம் அவர் பாஜக மேலிடத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தது தான். மேலும் அதிமுகவில் இருந்து வந்த முதல் முக்கிய பிரமுகர் என்பதால் அவருக்கு பாஜகவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஆள் தேடும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

பாஜக தலைவர் பதவியை எப்படியாவது பிடித்துவிட ஹெச்.ராஜா தீவிர முயற்சி செய்து வருகிறார். இதே போல் கே.டி ராகவன், வானதி சீனிவாசன் போன்ற மூத்த நிர்வாகிகளும் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளனர். அதே போல் கருப்பு முருகானந்தம், ஏபி முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகளும் தமிழக பாஜக தலைவர் பதவி மீது ஒரு கண் வைத்துள்ளனர். ஆனால் இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டது.

காரணம் அதிமுக பிரமுகராக இருந்தவர், அமைச்சராக இருந்தவர், பசையுள்ள பார்ட்டி, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்ற பாசிட்டிவ் விஷயங்கள் அதிகம் இருந்தது. ஆனால் அண்மையில் தான் பாஜகவில் சேர்ந்தவர் என்கிற விஷயம் அவருக்கு நெகடிவ்வாக உள்ளது. பாஜகவில் சேர்ந்த உடன் தலைவரானால் இவ்வளவு நாள் கட்சிக்கு உழைத்தவர்கள் என்ன செய்வார்கள் என்கிற கேள்வி நயினார் நாகேந்திரனை பாஜக தலைவர் ஆகவிடாமல் தடுத்துவிட்டது என்கிறார்கள்.

இதனால் முக்குலத்தோர் அல்லது கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை பாஜக தலைவராக்கலாம் என மீண்டும் தேடுதல் வேட்டையை பாஜக தலைமை தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் குப்பன் பெயர் மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரும் இதனை பயன்படுத்தி கவுண்டர் லாபி மூலமாக அந்த பதவியை பிடிக்க டெல்லி சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.