பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று இரவு திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் நகர்வுகளும் இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் 22ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதனை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆண்டுதோறும் தவறாமல் செய்து வருகின்றன. ஆனால் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் இந்த ஆண்டு தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதே போல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்பாய்ன்மென்ட் கோரியுள்ளார். இந்த தகவல் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எல்.முருகனா? உடனே வரச் சொல்லுங்கள். என்று கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன் பிறகு தான் சந்திப்பிற்கான காரணத்தை கேட்டுள்ளார் முதலமைச்சர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருக்களில் விநாயகரை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க முருகன் வருவதாக கூறியுள்ளார்கள். சரி, வரச் சொல்லுங்கள் என்று முதலமைச்சர் கூற,மாலை ஆறரை மணி அளவில் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன். சந்திப்பின் போது விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

உடனடியாக பரிசீலித்து நாளை தெரிவிப்பதாக அதாவது இன்று தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த விஷயத்தை பேசி முடித்த பிறகு எல்.முருகன் – எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியின் வியூகத்தை முருகனிடம் முதலமைச்சர் எடுத்துச் சொன்னதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன் நிறுத்த உள்ளதாகவும் அதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தியதையும் எடப்பாடி அப்போது சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள்.

அதற்கு பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பதாக எல்.முருகன் கூறியுள்ளார். சந்திப்பு நிறைவடைந்த அடுத்த சில நிமிடங்களில் தமிழக டிஜிபி திரிபாதியை தனது வீட்டிற்கு வரவழைத்தார் எடப்பாடி பழனிசாமி,

 

விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து வழிபட அனுமதித்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அப்போது டிஜிபி, முதலமைச்சரிடம் எடுத்துக்கூறியதாக சொல்கிறார்கள். மேலும் ரம்ஜான், பக்ரீத்திற்கு நாம் பொது இடங்களில் தொழுகையை அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கையில் ஊரடங்கை மீறி விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதித்தால் பிரச்சனைக்கு வாய்ப்பிருக்கதாக டிஜிபி தரப்பில் எடுத்துரைத்ததாக சொல்கிறார்கள். அதற்கு சில கண்டிப்பான  வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் விநாயகர் சிலை வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

அதாவது முருகன் கோரிக்கையை ஏற்று விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து வழிபட தமிழக அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முருகனுடன் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு முயல்வதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தால் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.