தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர்  முருகன் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையானது, தங்களின் 7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கி, “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்பதாகும். இதற்காக பாரதிய ஜனதா கட்சியானது பல்வேறு தொடர் முயற்சிகளை மனப்பூர்வமாக எடுத்து வந்துள்ளது.மே 11,12-2012ல், மதுரையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சங்கமம் மாநாட்டில் பட்டியல் வகுப்பிலுள்ள ஏழு உட்பிரிவுகளை (குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியான்) இணைத்து ஒரே பெயராக தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2015, ஆகஸ்ட் 6ந் தேதி அன்று மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும்  சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய தேவேந்திரகுல வேளாளர் மாநாட்டில், பாஜக தேசிய தலைவர் உயர்திரு. அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு ,மதுரை மாநாட்டு தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

2015 செப்டம்பர் 16ந் தேதி அன்று டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பிரதிநிதிகள் 101 பேர், பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து,மேற்படி கோரிக்கை மனுவை அளித்தனர். தனது இல்லத்தில் விருந்தளித்ததோடு, அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பிரதமர் அவர்கள் அறிவித்தார். தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டி, மாபெரும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட 5 லட்சம் கையெழுத்துப் படிவங்கள்,  மதுரையில் நடந்த நிறைவு விழாவில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர் சிங் அவர்களிடம், 2016 பிப்ரவரி 8ந் தேதி அன்று ஒப்படைக்கப்பட்டது. மே 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ,தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தேவேந்திர குல வேளாளர்களின் உட்பிரிவைச் சேர்ந்த பலரும் தங்களை அந்தப் பொதுப் பெயரில் குறிப்பிட வேண்டும் என அரசாணை வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த முயற்சிக்கு உறுதுணையாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளோம். இக்கோரிக்கை சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம், 05-09-2017 அன்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் திரு..ம. தங்கராஜ் அளித்த மனு, அரசு மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க 27-11-2017 அன்று எழுதப்பட்ட கடிதத்தின்படி, சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் S சுமதி அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.மானுடவியல் துறையின் ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை மானுடவியல் ஆய்வுக் குழுத் தலைவரும், இந்தத் துறையின் தலைவருமான டாக்டர் S. சுமதி அவர்கள் ,தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் அவர்களுக்கு  11-09-2018 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று ஒன்றாக  அறிவிப்பது சம்பந்தமாக பெறப்பட்ட மானுடவியல் துறையின் ஆய்வு அறிக்கையை ,15 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பக் கோரி, 10-10-2018 அன்று தேதியிட்ட கடிதம் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை சம்பந்தமாக தொடர்ந்து 26-11-2018, 03-01-2019, 21-01-2019, 28-02-2019, 16-04-2019, 19-06-2019 ஆகிய தேதிகளில் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு, தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் திரு.ம.தங்கராஜ் அவர்களின் மனு மீதான விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தொடர்ந்து அழைப்பு அனுப்பப்பட்டது. 

தேசிய தாழ்த்தப்பட்டோர்  ஆணையத்தின் துணைத் தலைவராக நான் பதவியில் இருந்தபோது,  மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், மாநில அரசிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதம் வர வேண்டுமென்றும் ,அன்றே நடந்த மாவட்ட ஆட்சித் தலைவருடனான கூட்டத்தில், இக் கோரிக்கை பற்றிய குறிப்புகளையும் வழங்கியுள்ளேன். 27-01-2019 அன்று மதுரையில் நடந்த எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் ,தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மாண்புமிகு பாரதப் பிதமர் அவர்கள் பேசியது, தமிழக வரலாற்றில் தேவேந்திரகுல வேளாளர் பண்பாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். 27-02-2019 அன்று திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்கள் தலைமையில், தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமாக அறிக்கை அளிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மானுடவியல் துறையின் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசின் அறிக்கை மத்திய அரசுக்கு கிடத்தவுடன், மத்திய அரசு துரிதமாக நடவடிக்கையை எடுக்கும் என்பது உறுதி.பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், முழுமையாக இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையானது நிறைவேறும் என்பது உறுதியாகும்.