Asianet News TamilAsianet News Tamil

கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் அதிமுக அரசை கிழித்தெறிந்த பாஜக..!! எகிறியடித்த எல். முருகன்..!!

உணவா,  மதுவா? என்ற கேள்விக்கு மது என பதில் அளித்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் எண்ணற்ற தாய்மார்களின் நிந்தனைக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு.

 
 

tamilnadu bjp criticized admk government  regarding tasmac
Author
Chennai, First Published May 5, 2020, 1:00 PM IST

போருக்கு நடுவில் கேளிக்கையா? என தமிழக அரசை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது, இது குறித்து  அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- வருகிற மே 7ஆம் தேதி,  அதாவது நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா  ஊரடங்கை   முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடலாம் என பல்வேறு தரப்பில்  கோரப்பட்ட  நிலையில் இந்த அறிவிப்பு கவலையையும் வேதனையையும்  அளிக்கிறது.  கொரோனாவுக்கு  எதிரான நடவடிக்கைகள்  ஒரு யுத்தம் என வருணிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. மக்கள் தங்கள் நோய் தடுப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும், அதுவே சிறந்த மருந்து, தீர்வு என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்க வேண்டிய இந்த நிலையில், உடலையும் உள்ளத்தையும் பலவீனமாக்கும் ஒரு போதைக்கு மக்களை தள்ளுவது வேடிக்கையான வேதனை. 

tamilnadu bjp criticized admk government  regarding tasmac

கடந்த 45 நாட்களாக கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், மற்றும்  காவல்துறை போன்ற அனைத்து ஊழியர்களையும்  ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் செயல் இது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. ஏற்கனவே தாக்குதலுக்கும் வசை மொழிகளுக்கும் உள்ளாகும் இவர்களின் பாதுகாப்பு இதனால் மேலும் கேள்விக்குறியாகும். அவர்களின் மன உறுதி பாதிக்கப்படும். போருக்கு நடுவில் கேளிக்கை என்பது போரில் வெற்றியை தராது. மாறாக  விபரீதமான விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். கோயில்களில் அன்னதானத்தை தொடர்ந்திருந்தால் வரவேற்று இருக்கலாம். தரிசனத்துக்கு தடை விதித்த போது அன்னதானத்திற்கும் தடைவிதித்த அரசு இன்னும் அன்னதானத்துக்கு அனுமதியளிக்கவில்லை. ஆனால் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு அனுமதி அளித்திருக்கிறது. உணவா,  மதுவா? என்ற கேள்விக்கு மது என பதில் அளித்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் எண்ணற்ற தாய்மார்களின் நிந்தனைக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு.

tamilnadu bjp criticized admk government  regarding tasmac

டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு அதற்கு கூறியிருக்கும் காரணங்கள் இன்னும் விநோதமானவை. அண்டை மாநிலங்களில் மதுக்  கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் திறக்கப்படுகிறதாம்!  மற்ற  மாநிலத்தோடு ஒப்பிட்டு நாம் எங்கே சிறக்கிறோம்,  எங்கே உயர்கிறோம் என்பதை குறிப்பிடுவதை விட்டுவிட்டு, அவர்களைப்போல நாங்களும் செயல்படுகிறோம் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. கொரோனா  நோய்த்தொற்று எதிர்காலத்தில் எத்தனையோ பொருளாதார மாற்றங்களை விளைவிக்கக் கூடியது. அதில் பல்வேறு  நஷ்டங்கள் ஏற்படலாம். அவற்றைத் தாண்டி வெற்றிபெற எத்தனை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமோ அத்தனையும் வகுக்கப்பட வேண்டும்.  அந்த வகையில் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவிட்டு இப்பொழுது முதலே மாற்று வருமானத்துக்கு வழி தேடலாம். டாஸ்மாக்கை மூட முன்வந்து, மாற்றுச் சிந்தனையை முன்னெடுக்க தமிழக அரசு முனையுமானால் தமிழக பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எல்லா வகையிலும் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் நல்கத் தயாராக இருக்கிறது. எனவே தமிழக அரசு, மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் தனது அறிவிப்பை மறு சிந்தனை செய்து வாபஸ் பெற வேண்டுமென கோடானகோடி தமிழக தாய்மார்களின் சார்பிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும்  கோரிக்கை விடுக்கிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios