Tamilnadu BJB leaders says We are bigger than Congress leaders

தமிழக காங்கிரஸில்தான், தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாகவும், தலைவர்களை விட கோஷ்டிகள் அதிகமாகவும் இருப்பதாக கூறப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், தமிழக பாஜகவில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது, தேசிய தலைவர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அதன் காரணமாகவே, பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி டைரி உள்ளிட்ட விவகாரங்களில், மத்திய அரசுக்கு ஆளும் எடப்பாடி தரப்பு பல விஷயங்களில் அடங்கி போவது, விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், அதை தமக்கு சாதமாகமாக பயன்படுத்திக் கொண்டு, வர்த்தக ரீதியான பல காரியங்களை இங்குள்ள பாஜக தலைவர்கள், சாதித்து கொள்வதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதை, தமிழக தலைவர் தமிழிசை, ஆதாரங்களுடன், தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், தமிழைசை, சி.பி.ராதாகிருஷ்ணனை தவிர, முக்கிய தலைவர்கள் பலரும், அதிமுக அமைச்சர்களோடு வர்த்தக ரீதியிலான தொடர்பில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதை அறிந்த அமித் ஷா, முதலில், ஊடகங்களுக்கு முன்னால் நின்று பேட்டி கொடுப்பதை குறைத்து கொண்டு, கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று கண்டிப்பாக கூறியதுடன், தமிழக வருகையையும் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து, தமிழிசையை நீக்க, மற்றொரு கோஷ்டி பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால், அதை செம்மையாக செய்து முடிக்க முடியாமல் திணறுகிறது.

ஏனெனில், எதிர் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆதாரங்களுடன் திரட்டி, அதை அவர் மேலிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.

அதில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிற்க வேண்டிய ஒரு தொகுதியில், பணம் வாங்கி கொண்டு, ஒரு உப்புமா கட்சி தொழிலதிபருக்கு விட்டு கொடுத்தது, மற்றொரு தொகுதியில், நிராகரிக்கப்படும் அளவுக்கு வேட்புமனுவை பூர்த்தி செய்ய வைத்து ஆதாயம் அடைந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாம்.

அவற்றை எல்லாம் முழுமையாக படித்த, மத்திய தலைமை, இங்குள்ள முன்னணி தலைவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம். அதனால், இப்போதைக்கு, தமிழிசையை தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் விஷயத்தில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்யாசம் இருக்காது என்கின்றனர் தமிழக பாஜக முன்னோடிகள்.