Asianet News TamilAsianet News Tamil

காவிரி மேலாண்மை வாரியம்.. பிற்பகலில் சட்டமன்ற சிறப்பு கூட்டம்..?

tamilnadu assembly may assemble in evening
tamilnadu assembly may assemble in evening
Author
First Published Mar 15, 2018, 1:43 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் வழங்க நேரம் ஒதுக்கப்படாததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அந்த சந்திப்பின்போதே, சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதற்கிடையே நேற்று மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உறுதியாக தெரிவிக்காததோடு பிடிகொடுக்கவும் இல்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வார்த்தைகளை குறிப்பிட்டு காலம் தாழ்த்த மத்திய அரசு முயற்சிப்பது, மத்திய நீர்வளத்துறை செயலாளரின் பேச்சிலிருந்தே வெளிப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வண்ணம், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த 10ம் தேதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருந்ததால், சிறப்பு கூட்டத்தை உடனடியாக அரசு கூட்டவில்லை. இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடித்ததும், திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கிடையே இன்று பிற்பகல் 3.30 மணியளவில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios