தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 23ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் உரையுடன் துவங்கும் இந்த கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் துவங்கும் என சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.

ஆளுநர் உரையில் அதிமுக அரசின் சில திட்டங்கள் பற்றி குறிப்பிடப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில நாட்கள் விவாதம் நடைபெறும். மேலும் தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி, தொடர்ச்சியாக விவசாயிகள் உயிரிழந்து வருவது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் மற்றும் தற்போது முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு கூடும் முதல் பேரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.