தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பிஜேபிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்பதுதான் பிஜேபி பிரமுகர்களுக்குள் தற்போது நடக்கும் விவாதமாக மாறியிருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பிஜேபி தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரான பின் அந்த இடத்துக்கு தமிழிசை நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி காலத்தின் மீதமிருக்கும் நாட்களை நிறைவு செய்த தமிழிசை, இரண்டாவது முறையாக தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். விரைவில் தமிழிசையின் பதவிக் காலம் முடிவடைகிற நிலையில் அடுத்த அடுத்த தலைவரை யாரை நியமிக்கலாம் என ஆலோசனையில் உள்ளதாம் டெல்லி மேலிடம்.

தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் தற்போது அந்த லிஸ்டில் உள்ளனர்.  கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் ஒன்று தான் என நினைக்கிறதாம் பிஜேபி தலைமை.

இந்த குழப்பத்தால் தலைவர் பதவிக்கான லிஸ்டில் இடம்பிடித்திருப்பவர் நயினார் நாகேந்திரன். அதிமுகவிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிஜேபிக்கு தாவியவர் தான், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்.  

இதுவரை தமிழக பிஜேபி தலைமையில் நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பிஜேபி. அந்தக் கோணத்திலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார். 
நயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர். அவருக்கு பிஜேபி தலைவர் பதவி கொடுக்கலாமா என்றும் சில குரல்கள் எழுகின்றன. 

ஒருவேளை ராமநாதபுரம் தொகுதியில் பிஜேபி ஜெயித்தால், மத்தியிலும் மீண்டும் பிஜேபி ஆட்சி அமையுமானால் நயினாருக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்புள்ளதால். அதைத் தடுக்கவே சிலர் இப்போதே நயினார் பிஜேபி தலைவர் என்ற விஷயத்தைப் பேச வைக்கிறார்கள்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழக பாஜக தலைவர் மாற்றம் என்பது உறுதி என சொல்கிறார்கள் பிஜேபியினர்.