தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றபோதும், தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்துவது உறுதியாகி உள்ளது.


  நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளாரை எதிர்த்து பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்குத் தொடர்ந்தார். “வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றியைச் செல்லாது என்றும்” மனுவில் தெரிவித்திருந்தார். இதே வழக்கை அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். ஏற்கெனவே கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலங்கானா ஆளுநராகிவிட்டதால், அவர் சார்பில் அந்த வழக்கு நடத்தப்படுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அவருடைய வழக்கறிஞர் இரு வழக்குகளை ஒன்றாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டதன் மூலம், கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.