தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் அறிவித்தார். அதில் தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா என்கிற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அதையடுத்து இரண்டும் மாநிலத்திற்கும் பொதுவான ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்தார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை தெலுங்கானாவில் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநில ஆளுநராக காலை 11  மணி அளவில் பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, தெலுங்கானா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தெலுங்கானா கிளம்பும் முன் பேட்டியளித்த தமிழிசை தனது கடமைகள் தெலுங்கானாவில் இருந்தாலும் நினைவுகள் தமிழகத்தில் தான் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.