சென்னை லயோலா கல்லுரியில் கடந்த இரண்டு நாட்களா வீதி விருது விழா நடைபெற்றது. அப்போது அங்கு ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரதமர் மோடி, பாரத மாதா மற்றும் இந்து மதத்தினரை இழிவு படுத்தும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழக டிஜிபியைச் சந்தித்து லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். ஆனால் லயோலா கல்லூரி இதற்காக மன்னிப்புக் கோரியது.

இந்நிலையில் லயோலா கல்லூரியில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தையும், பெண்களையும் அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கண் காட்சி நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னணியை போலீசார் கண்டறிய வேண்டும். இதுபோல வேறு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என அனைத்துத் தலைவர்களும் கொதிந்தெழுந்து கண்டன அறிக்கை விட்டிருப்பார்கள்.

ஆனால், இந்துக்களை அவமதிக்கும் கண்காட்சியை கண்டிக்கக்கூட அவர்களால் முடியவில்லை. எல்லா விதத்திலும் இரட்டை அளவுகோல்களை பின்பற்றுகின்றனர். இனியும் இதை மக்கள் பொறுக்கமாட்டார்கள் என்று தமிழிசை கடுமையாக  பேசினார்.