தெலங்கானாவின் முதல் முழுநேர ஆளுநகராகவும் முதல் பெண் ஆளுநராகவும் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுகொள்கிறார்.
தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு முழு நேர ஆளு நர் நியமிக்கப்படாமல் இருந்தார். ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களின் ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டுவந்தார். அண்மையில் 6 மாநிலங்களுக்குக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய ஆளுநர்களை நியமித்தார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமித்தார்.

இதையடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழிசை  விலகினார். இந்நிலையில் மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை இன்று பதவி ஏற்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


இந்தப் பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள், நீதிபதிகள், பாஜக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் பங்கேற்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் ஹைதராபாத் சென்றுள்ளார்.