கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக நின்ற கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு மேல் மாநில தலைவர் பதவியில் அவர் இருப்பதால் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் அறிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

கமலாலயத்தில் அன்று நிருபர்களை சந்தித்த அவர் நெகிழ்ச்சியாக காணப்பட்டார். தனக்கு இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 

இதனிடையே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார் தமிழிசை. அதில், தான் தலைவராக இருந்த காலத்தில் தமிழகத்தில் பாஜக சார்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் பாஜக தேசிய கட்சி என்பதால் மற்ற மாநிலங்களில் இருக்கும் பாஜக தலைவர்கள் தங்கள் வெற்றியை கட்சி மேலிடத்திடம் சமர்பிக்கும் போது தமிழகத்தில் இருந்து அப்படி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்கிற வேதனை தனக்கு அதிகம் இருந்ததாக நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.