இந்துக்கள் தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

 இந்த போராட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை அறங்காவலர்கள் எதற்கு காவலராக இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார்.

 

ஆவியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள், காவியை கட்டுப்படுத்த முடியாது என்றும் இந்துக்கள் தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்தார். மேலும், நாம் கும்பிடுவது சாமி சிலைகள் தானா அல்லது ஆசாமிகளால் வைக்கப்பட்ட போலி சிலைகளா என பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக கூறினார்.