இது பெரியார் மண் அல்ல; பெரியாழ்வார் மண் என்றும் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் பாஜகவின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ரத யாத்திரையை தடுக்கிறார்கள். இது பெரியார் மண் என ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு கூறிக்கொள்கிறேன் இது பெரியார் மண்ணல்ல; பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ்.

ராகுல் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரை, இந்தியாவில் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸூடன் வைகோ இருக்கும் வரை எங்களுக்கு கவலையில்லை என்றார்.

கருப்பு துண்டை, காவி துண்டு வெற்றி கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும். காவி நிறம் தமிழ்நாட்டில் வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். நிச்சயம் நிலைநட்டுவோம்.
 
சில பேர் வெற்றிடத்தை நிரப்புகிறேன் என, நான்தான் சூப்பர் ஸ்டார், நான்தான் உலக நாயகன் என்று வருகிறார்கள். எங்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்களிடம் உள்ளார்கள். இனி நாங்கள் ஏன் கவலை படவேண்டும். 

இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ளவர்கள் கூட சொல்கிறார்கள். அவர் தான் சூப்பர் ஸ்டார். உலகத்திலேயே 10 கோடி தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய கட்சி பாஜக. அதை நிகழ்த்தியவர் அமித்ஷா. அவர் தான் உலக நாயகன் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.