கல்லூரி மாணவிகள் எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மட்டுமே நினைக்க வேண்டும். வீழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவே கூடாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில்  சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். “தமிழகத்துக்கு வர வேண்டும் என்று திட்டமிடும்போது, 2 நாட்களுக்கு முன்பாகவே அம்மா வீட்டுக்கு செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ அது எனக்கும் வந்துவிடுகிறது. அந்தக் குதூகலம் என்னை தொற்றிக்கொள்கிறது.” என்று தமிழகத்துக்கு வரும் உணர்வை தமிழிசை வெளிப்படுத்தினார்.

 
தற்போது ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலை சர்ச்சையாகி உள்ள நிலையில், அதைப் பற்றி குறிப்பிடமால், தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்ற கருத்தை விழாவில் தமிழிசை பகிர்ந்துகொண்டார். “கல்லூரி மாணவிகள் யாருமே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்காதீர்கள். இந்த வாழ்க்கை என்பது வாழ்வதற்த்தான்.  கர்ப்பிணி பெண்களுக்கு நாங்கள் ஸ்கேன் செய்யும்போது 2 சென்டி மீட்டர்தான் அந்தக் குழந்தை இருக்கும்.அதிலிருந்து இதயத் துடிப்பு வரும். அதைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் அந்த அம்மா எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் தெரியுமா?
ஆனால், அந்த இதயத் துடிப்பை நிறுத்தும் உரிமை உங்கள் யாருக்கும் கிடையவே கிடையாது. இன்றைய இளைய தலைமுறையினர் எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மட்டுமே நினைக்க வேண்டும். வீழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவே கூடாது.” என்று தமிழிசை உணர்ச்சிகரமாகப் பேசினார்.