சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது, ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி முதலமைச்சர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கயிறு கட்டினார்.

  

சுதந்திர நாளோடு சேர்த்து இன்று ரக்சா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதராக நினைக்கும் ஆண்களின் கைகளில ராக்கி கயிறைக் கட்டுவது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.   

இந்நிலையில், இந்துசமய அறநிலைத்துறை சார்பாக இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு சமபந்தி மற்றும் பொது விருந்துக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக முழுவதும் 448 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இந்த சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கட்டினார். முன்னதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வடமாநிலப் பெண்கள் சென்றனர். அங்கு முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர். இதை அடுத்து பிரம்மகுமாரிகள் அமைப்பினர், முதலமைச்சரை சந்தித்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.