Tamilisai Soundarajan and H Raja condemns attack on bjp cadres

வைகோ யாத்திரையின்போது பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தைத் துவக்கிய அன்றே வைகோவுக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டினர். குளத்தூர் பகுதியில் பிரச்சாரத்தின்போது, வைகோ மீது மதுபாட்டில்கள் வீசப்பட்டன. வைகோ மீது படாமல் கூட்டத்தில் இருந்தவர் மீது விழுந்தது.

செய்துங்கநல்லூர் பகுதியில் பிராச்சாரத்தை தொடங்கிய வைகோ, பேய்குளம், சாத்தான்குளம், மெய்ஞான புரம், பரமன்குறிச்சி மற்றும் உடன்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன்குடி, சத்தியமூர்த்தி பஜாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வைகோவுக்கு, பாஜகவினர் கருப்புக்கொடி, கருப்பு பலூன் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வைகோ ஒழிக என்றும் அவர்கள் கோஷமிட்டனர். 

வைகோ இருந்த வாகனத்தை முற்றுகையிடுவதுபோல் பாஜகவினர் நடந்துக் கொண்டனர். இதனால், மதிமுக தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வைகோவின் பிரச்சார வாகனம் மீது கற்கள் வீசப்பட்டன. ஆனால் வைகோ மீது கற்கள் படவில்லை. இதனை அடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். 

இந்த கல்வீச்சின்போது மதிமுகவினர் 3 பேர் காயம் அடைந்தனர். கல்வீச்சில் ஈடுபட்ட பாஜகவினர் 25 பேரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவினர் 15 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, வைகோ பிரச்சாரத்தின்போது பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

அதில், பிரதமருக்கு எதிராக திமுக, மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியபோது பாஜக வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் உடன்குடியில் வைகோவிற்கு கருப்புக்கொடி காட்டிய பாஜகவினர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மதிமுகவின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வைகோவின் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.