புலி பதுங்குவது பாயத்தான் என மு.க.ஸ்டாலின் கூறினாலும் பூனையாகவே உள்ளது திமுக என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். 

முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராதாமணியின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:- சட்டமன்ற சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவை கூடிய தினத்தன்று அறிவித்தோம். சபாநாயகர் மீது நாம் எதற்காக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுத்தோம் என்றால் அப்போதே நான் தெளிவாக சொன்னேன். 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க திட்டமிட்டார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கொடுத்தோம். 

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்ற பிரச்சினையை கொண்டு வந்தால் முதலில் அதைத்தான் தீர்த்து வைக்க வேண்டும். 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்காகத்தான் நாங்கள் அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால் ஊடகங்களில் என்ன வருகிறது என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து விட்டு தி.மு.க. பதுங்குகிறது என்கிறார்கள். புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என கூறியிருந்தார். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பா தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். புலி பதுங்குவது பாயத்தான் என மு.க.ஸ்டாலின் கூறினாலும் பூனையாகவே உள்ளது. திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகிக்கின்றனர். ஸ்டாலின் தன் மீதே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். திட்டங்களை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி பயன்பெறாமல் போராட்டம் நடத்துகின்றனர் என தமிழிசை கூறியுள்ளார்.