வங்கி தேர்வு முடிவு தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தி மக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரிவினையை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டேட் பேங்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி எனவும் பாஜக அரசு சமூக நீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது எனவும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, சகோதரர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு பதிவு போட்டிருக்கிறார். வறுமையால் வாடும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுத்தது ஏதோ சமூக நீதிக்கு எதிரானது போலவும், பாரதிய ஜனதா கட்சிக்கு சமூகநீதியைப் பற்றி அக்கறையே இல்லை என்பதைப் போலவும், மோடியின் ஆட்சிக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை தமிழக மக்களின் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இது மிகத் தவறான ஒன்று. 

ஏழ்மையில் வாடும் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலையில், வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் இப்படிப்பட்ட பதிவுகளை தேடித்தேடி போட்டு வருகிறார். மேலும், மத்திய அரசிடமிருந்து நல்ல திட்டங்கள் வருவதை திசை திருப்புவதற்காக ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார் என தமிழிசை கடுமையாக மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.