tamilisai says that admk defeated with jaya death

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை எனில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன், இன்று ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுடன் அதிமுக முடிந்து விட்டது என தெரிவித்தார்.

தற்போது நாங்கள்தான் அதிமுக என்று கூறிச்கொள்ளும் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருமே உண்மையான அதிமுக கிடையாது என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நேர்மையாக நடத்த முடியாவிட்டால் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கொள்ளையடித்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு டி.டி.வி.தினகரன் ஆணவத்துடன் பேசுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.

தேர்தலை தள்ளி வைத்தால் இரு மடங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என தினகரன் கூறியிருப்பது பணத்தால் எதையும் செய்யலாம் என்ற திமிர்தான் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்று தெரிவித்த தமிழிசை, அதன் அடிப்படையில் தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தவறு செய்துவிட்டு ஆதாரம் இருக்கிறதா என தினகரன் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழிசை, தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும் என கூறினார்.