கோயில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆனதாக வசனம் பேசி, கோயில்களை தன் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது கழக ஆட்சியில்தானே என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்களின் சுயநலத்துக்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு, அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருக்கோயில்களைச் சீரழித்துக் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

அதிமுக அரசின் ஆட்சியாளர்களோ தங்களின் சுயநலத்துக்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருக்கோயில்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். '

அந்த அவலத்தைத்தான் யுனெஸ்கோ தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டு சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

கோயில் நிலங்களை, தன் கட்சியினருக்கு தானம் செய்தது கழக ஆட்சி என்றும், கோயில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆனதாக வசனம் பேசி, கோயில்களை தன் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது கழக ஆட்சியில்தானே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளர்.

மேலும், கடவுள் சிலைகள் களவுகள் யாரால்? பீரங்கி கொண்டு தகர்க்கும் நாளே பொன்னாள் என்று சொல்லி தங்கள் அங்கிகளையும் வங்கிகளையும் கோயில் சொத்துக்களால் நிரப்பிக் கொண்டது யார்? எனவும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழிசை கேட்டுள்ளார்.