புதுச்சேரியில் முதல்வர் தான் முதல்வராக செயல்படுகிறாரே தவிர வேறு யாரும் முதல்வராக செயல்படவில்லை என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மும்மொழிநாயக்கன்குப்பம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான சாலையினை அகலப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் இன்று நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை ''முதல்வர்தான் முதல்வராக செயல்படுகிறார். வேறு யாரும் முதல்வராக செயல்படவில்லை. சில ஆலோசனைகளை நான் வழங்குவது மருத்துவ உலகில் கொரோனா காலத்தில் இங்குள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சகோதரியாகத்தான் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேனே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்தவித்திலும் புதுச்சேரியில் மறுக்கப்படாது, மறைக்கவும்படாது என்பதை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இங்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், எம்எல்ஏக்கள் என அனைவருடைய ஒற்றை நோக்கமும் புதுச்சேரியை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.

மேலும் புதுச்சேரிக்கு இன்னும் பல திட்டங்கள் வர இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். குறிப்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எங்களோடு பேசும்போதும், தனிப்பட்ட முறையில் பேசும்போதும் புதுச்சேரி வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா வந்திருந்தபோது, புதுச்சேரி மக்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். ஆகவே என்றுமே மக்கள் நலனில்தான் அத்தனைபேரின் அக்கறையும் இருக்கிறது. புதுச்சேரி புதுமையான வளர்ச்சியடைந்த மாநிலமாக வரவிருக்கிறது என்று பேசினார்.

மேலும் முதலமைச்சர் ரங்கசாமி பேசிய போது, மத்திய அரசை அணுகி இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது, 4 வழிச்சாலையாக அமைக்க அனுமதி கொடுத்துள்ளனர். மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ.70.97 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ரூ.59.49 கோடிக்கு ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். பாலம் கட்டுமானப்பணி விரைவில் தொடங்கி 24 மாதத்தில் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் விரைவாக முடிக்க வேண்டும். விரைவாக முடிப்பது மட்டுமின்றி,பாலம் தரமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல் புதுச்சேரியில் அனைத்து சாலைகளையும் மேற்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க இருக்கின்றோம். இருதினங்களுக்கு முன்பு கோர்காடு, ஏம்பலம் ஆகிய சாலைகள் மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நமது எண்ணம் புதுச்சேரியில் உள்கட்டமைப்புகளை விரைவாக மேம்படுத்த வேண்டும் என்பதுதான். இதற்காக மத்திய அரசின் நிதியுதவியை நாம் கேட்டிருக்கின்றோம். மத்திய அரசும் நமக்கு மிகவும் உதவியாக இருந்து கொண்டு பல பணிகளுக்கான நிதியை ஒதுக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறது. விரைவாக பணிகளை முடிப்பதற்கான நிலையில் நம்முடைய துறைகள் செயல்பட வேண்டும்.துணைநிலை ஆளுநர் நமக்கு பல பணிகளை செய்ய பெரிதும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு எனது நன்றி தெரிவத்துக்கொள்கிறேன்'' என்றார்.