Tamilisai criticizing about stalin beef protest

மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என ஸ்டாலின் பகல் கனவு காண வேண்டாம் என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவரையே(ஸ்டாலின்) இளைஞர்கள் அனுமதிக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்று பீட்டா எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றது.

இதனால் 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரப்பி, பகிர்ந்து கொண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர்.

இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் பிறபிக்கபட்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இளைஞர்களின் இத்தகைய செயல்கள் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மெரீனா சென்று அவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி ஆனால் இதை அரசியல் மேடையாக்க வேண்டாம் என இளைஞர்கள் ஸ்டாலினை கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஸ்டாலின் அங்கிருந்து சென்றார்.

இதையடுத்து நேற்று மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின் மீண்டும் மெரீனா போராட்டம் நடக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என ஸ்டாலின் பகல் கனவு காண வேண்டாம் என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவரையே(ஸ்டாலின்) இளைஞர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி சமைத்து சாப்பிடும் செயல் மனிதத்தன்மையற்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.