அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை எழுப்பியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தார்,

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் சூர்யா  வன்முறையைத் தூண்டுவதாக குற்றம்சாட்டினார். அமைச்சர் கடம்பூர் ராஜு, சூர்யாவை அரை வேக்காடு என வருணித்தார்.

அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இதே போல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனி, ஆர்.கே.செல்வமணி போன்றோரும் சூர்யாவின் கருத்தை ஆதரித்துப் பேசினர்.

இந்நிலையில் தான் நேற்று நடைபெற்ற காப்பான் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவில் பேச்சை ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் சூர்யாவின் பேச்சை மோடி கேட்டிருப்பார் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவை ஆதரித்து பேசியதிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாள்களிடம் பேசிய அவர் , புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் சூர்யா பேசியுள்ளார். அவரின் பேச்சை ரஜினி ஆதரிப்பது சரியில்லை என கூறினார்.

தற்போது தான் கல்வியில் ஏற்றத் தாழ்வு உள்ளதாகவும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் இந்த ஏற்றத் தாழ்வு நீக்கப்பட்டுவிடும் எனவும் தமிழிசை தெரிவித்தார்