ஒரு அரசியல்வாதி என்பவர் பொது மக்களின் சுக-துக்கங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும் என்றும், இந்திப் படங்களில் நடித்து ஆதாயம் தேடி வரும் கமலஹாசனுக்கு அந்தத் தகுதி கிடையாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக சொன்னாலும் சொன்னார், அமைச்சர்களுக்கும், கமலுக்கும் இடையே பெரும் சொற்போரே நடைபெற்று வருகிறது.

கமலஹாசனை வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு வந்துவிட்டு அரசியல் பேச வேண்டும் என்று பல முனைகளில் கமல் மீது அமைச்சர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் கமலஹாசனுக்கு எதிராக பாஜக தலைவர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா போன்றோர் கடுமையாக பேசி வருகின்றனர். கமல் இதுவரை பொதுமக்களுக்காக போராடியதுண்டா என தமிழிசை கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கமல் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக  தெரிவித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, இந்திப் படங்களில் நடித்து ஆதாயம் தேடும் கமலஹாசன், இந்தித் திணிப்புக்கு எதிராக எப்போது குரல்  கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.

களத்தில் வந்து இறங்கி அரசியல் செய்ய கமலஹாசன் தயாரா? என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

அரசியல்வாதி என்றால் மக்களின் சுக,துக்கங்களில் பங்கேற்க வேண்டும் அப்படி பங்கேற்ற அனுபவம் கமலுக்கு உண்டா எனவும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.