tamilisai condemns edappadi palanisamy about dental college announcement

புதிய பல் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ள நிலையில் தற்போது விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் மகிழ்ந்து இருப்பார்கள். அந்த பகுதி மக்களும் மகிழ்ந்து இருப்பார்கள்.

ஆனால் இது மக்களை ஏமாற்றும் வேலை. இல்லாத ஊருக்கு வழி காட்டுவது போல் பொய்யான வாக்குறுதியை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்

உண்மை நிலையை தெரிந்துதான் எடப்பாடி இப்படி அறிவித்தாரா? இல்லை போகிற போக்கில் எதையாவது செல்வோம் என்று சொன்னாரா? என்பது தெரியவில்லை எனவும் தமிழிசை குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் தனியார் கல்லூரிகள் 28 உள்ளது. நாடு முழுவதும் பல் மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருப்பதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும் புதிதாக பல் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியை தொடங்க முடியும்? அங்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு என்ன உத்தரவாதம்? என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் என கேட்டுக் கொண்டார்.