மூன்று நாட்களுக்கு முன்பு வரை ரஜினி நேற்று வரை அஜித் என அலைபாய்ந்த பாஜகவின் திட்டத்திற்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஜித். இந்த நிலையிலும், அஜித்தை புகழ்ந்து ரஜினியை தாக்கி பேசியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். 

மோடியின் கருத்துக்களை மக்களிடம் அஜித் ரசிகர்கள் கொண்டு செல்வார்கள், எனவும் தமிழகத்தில் தாமரை மலர அவர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதற்கு அதிரடியாக அறிவிப்பு கொடுத்து தனக்கு அரசியல் ஆசை இல்லை என முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்.

 

அஜித்தின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்த தமிழிசை, ’’அஜித்குமாரை பாஜகவில் சேருமாறு அழைக்கவே இல்லை. அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சில நடிகர்களைப் போல சொல்லாமல், அஜித் தெளிவான முடிவை அறிவித்துள்ளார். அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று அஜித் கூறியிருப்து வரவேற்கத்தக்கது. நான் அவரை பாஜகவில் சேருமாறு அழைக்கவில்லை. நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தைக்கு அஜித் உதவினார். அதையே தான் நான் பாராட்டினேன்’ என அவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

’அரசியலுக்கு அதோ வருகிறேன்... இதோ வருகிறேன்..’ எனக் கூறி அவர் ரஜினியை தமிழிசை தாக்கியுள்ளார் என்கிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றத்தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் தமிழிசை.