நடிகர் ரஜினிகாந்த், சுமார் 7 ஆண்டுகள் கழித்து இன்று தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அபோது, ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார்.

அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். பின்னர், நான் வரமாட்டேன் என கூறினால், நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள். என்னை அரசிலுக்கு கொண்டு செல்ல சில கட்சிகள் ஆதாயம் தேடுகிறது” என பேசினார்.

ரஜினியின் இந்த பேச்சு, அரசியல் தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அரசியலில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது:-

அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக, சில கட்சிகள் தன்னை அணுகுவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு முன், அவர் பேசிய பேச்சில் நல்ல கருத்துகள், ஒழுங்கங்கள் இருந்தன.

இளைஞர்கள் சிகரெட் பிடிக்க கூடாது. மது குடிக்க கூடாது. ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என பேசினார். இது வரவேற்க தக்கது. அதேபோல், அரசியலில் ஊழலற்ற தன்மை இருக்க வேண்டும். ஊழலற்ற கட்சி, ஊழலற்ற தலைமை இருக்க வேண்டும் என்றார்.

ரஜினியின் இந்த பேச்சு, இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டுதல்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில், ஆரசியல் ஆதாயத்துக்காக, சிலர் தன்னை அணுகினார்கள் என கூறியது தவறானது. அவரை மரியாதை நிமித்தமாக அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அதை அவர் அரசியல் ஆதாயம் என கூறுவது ஏற்க முடியாது.

1996ம் ஆண்டு ஒரு கூட்டணிக்காக குரல் கொடுத்தார். அதன்மூலம் ஊழலற்ற ஆட்சி  அமைந்ததா? அந்த கூட்டணி ஊழலற்ற வளர்ச்சியை தந்ததா?

பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அதை அவர், அரசியல் ஆதாயம் என கூறுவது 200 சதவீதம் தவறு. அது மிகவும் குறுகிய வார்த்தை.

கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அவர் ரஜினியை சந்தித்தார். அது நட்பு ரீதியானது, மரியாதை நிமித்தமானது. அதை வைத்து ரஜினியை அரசியலுக்கு அழைத்ததாக கூறமுடியாது. அதை பற்றி கங்கை அமரனே கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.