தேங்கிய குட்டையாக இருக்கும் தமிழக பா.ஜ.க.வில், அவ்வப்போது அதிர்வலைகளை உருவாக்கும் ஒரே கேரக்டர் யார்? என்றால் அது வானதி சீனிவாசன் தான். மாநில பொதுச்செயலாளராக இருக்கும் அவர் தி.மு.க. உள்ளிட்ட பா.ஜ.க.வின் எதிர்கட்சிகளை  சும்மா நறுக் தொனியிலான விமர்சனங்களில் நொறுக்கி எடுப்பார். 

ஹெச்.ராஜா ஏற்படுத்தாத அதிர்வலைகளா? என கேட்கக் கூடாது.  ஏனென்றால் ராஜா உருவாக்குவதெல்லாம் சர்ச்சை சுனாமிகள். அதன் லெவலும் தனி, அதற்காக தமிழக பா.ஜ.க. வாங்கிக் கட்டும் இடிகளும் தனி. ஆனால் வானதி அப்படியில்லை. தேவைக்கு ஏற்றார்போல் அளவெடுத்து அடித்து நொறுக்குவார். 

அந்த வகையில் இப்போது மேடம் ஒரு பரபரப்பு பட்டாசுக்கு திரி கொளுத்தியிருக்கிறார். இதுவரையில் எதிர்கட்சி பெரும் புள்ளிகளை மட்டுமே பொளந்தெடுத்து வந்தவர், இந்த முறை தங்கள் இயக்கத்தின் முக்கிய தலையான தமிழிசையையே தெறிக்கவிட்டிருக்கிறார். 

முன்னணி அரசியல் வாரம் இருமுறை இதழொன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் ’தமிழிசையோடு உங்களுக்கு என்ன தகராறு? ‘தமிழிசை இருந்தபோது தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்தது. இப்பவும் வளர்கிறது!’ன்னு சூசகமா சூப் வெச்சிருக்கீங்களே?’ என்று கேட்கப்பட்டதற்கு....

“சிலர் கூட வாழ்க்கை முழுக்கவே நட்புல இருப்போம். ஆனா சிலர் கூட சில மணி நேரங்கள் கூட நட்பு நீடிக்காது. எல்லார் கூடவும் எல்லா நேரங்களிலும் மிக அழுத்தமான, இறுக்கமான நட்பை வெச்சுக்க முடியாது. 

எனக்கும் தமிழிசைக்கும் இடையில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. மாநில தலைவராக அவர் வழங்கிய உத்தரவுகளை மிக துல்லியமாக செஞ்சு முடிச்சவ நான். அட எல்லோருமே கட்சிக்குத்தானே உழைக்கிறோம். இதில் என்ன முரண்பாடெல்லாம்?

உண்மை இப்படியிருக்க, இதையெல்லாம் தாண்டி ‘எங்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்ததில்லை! என் அரசியலைப் பார்த்து அவருக்குள் ஒரு பதற்றம் இருந்தது! நான் அவரை ஓவர்டேக் பண்ணிடுவேனோன்னு பயந்தார்’ என்று வதந்தி கிளப்பிக் கொண்டே இருந்தனர், இருக்கின்றனர். 

அதெல்லாம் பொய்.” என்கிறார். 

நம்பிட்டோம்!