அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இறுதி நாளான நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது தனது பேச்சினிடையே தமிழ் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். அவர் கூறும்போது இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலவர் கணியன் பூங்குன்றனார் என்றும் அவரது வாக்கியம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் பெருமைப்பட தெரிவித்தார்.

இதற்கு தமிழகத்திலிருந்து பல்வேறு தரப்பினரும் பாராட்டி  வருகின்றனர். இந்தநிலையில் இது சம்பந்தமாக பேசிய தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பிரதமர் மோடியின் தமிழ் சேவைக்காக தமிழர்கள் அவரை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது இந்திய வரலாற்றில் தமிழை மேற்கோள்காட்டி எந்த பிரதமரும் பேசவில்லை என்றும் ஐநாவில் புறநானூற்று பாடலை போற்றி புகழ்ந்து பேசிய பிரதமர் மோடிக்கு தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் அந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்