tamil raised me in high position said rajini
தமிழ் கற்றதால் தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து வருகிறார். ஐந்தாவது நாளான இன்று, சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், 1973ம் ஆண்டு முதன்முதலில் சென்னை வந்தேன். அப்போது மெட்ராஸ் என்றுதான் அழைப்பார்கள். அப்போதெல்லாம் கர்நாடகாவில் மெட்ராஸைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றில் மெட்ராஸ்தான் சூப்பர். மெட்ராஸ் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பெருமையாக பேசுவார்கள் என ரஜினி தெரிவித்தார்.
தமிழ் மட்டும் கற்றுக்கொள்.. உன்னை எங்கே கொண்டுபோய் விடுகிறேன் என்று பார்.. என பாலச்சந்தர் என்னிடம் கூறினார். நானும் தமிழ் கற்றேன். அவர் சொன்னது போலவே என்னை மிகப்பெரிய நிலைக்கு உயர்த்திவிட்டார். என்னை வளர்ப்பு மகன்போல பாலச்சந்தர் பார்த்துக்கொண்டார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மணிரத்னம், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் என்னை சூப்பர் ஸ்டாராக்கினர். இந்தியாவையே என்னை திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர் என தன்னை சினிமா துறையில் ஒவ்வொரு படியாக உயர்த்தியவர்களை நினைவுகூர்த்து பேசினார்.
