tamil parties help bjp to divert major issues
தமிழக மக்களின் போர்க்குணமும், சுய மரியாதை உணர்வும் மெரினா, நெடுவாசல் மற்றும் மீனவர் போராட்டங்கள் வாயிலாக உலகத்திற்கே உணர்த்தப்பட்டுள்ளது.
இதுதான், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு, குறிப்பாக சங் பரிவாருக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
எச்.ராஜா, இல.கணேசன், பொன்னார் போன்றவர்களின் அண்மைக்கால பேச்சை உற்று நோக்கினால் அது நன்கு விளங்கும்.
சுய மரியாதையோடு கூடிய போர்க்குணம், அடிப்படை வாதிகளால் உருவாக்கப்பட்ட அனைத்து இயக்கங்களுக்கும் அச்சுறுத்தலாகவே விளங்கும். இதுவே உலக வரலாறு.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கால் பதித்த சங் பரிவாரையும், பாரதிய ஜனதாவையும், தமிழகத்தில் கால் பதிக்க விடாமல் தடுப்பது இங்குள்ள எந்த இயக்கமும் அல்ல.
தமிழனுக்கு ரத்தத்தோடு பிறந்த சுயமரியாதை உணர்வும், போர்குணமுமே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அந்த உணர்வு மேலோங்கி விட்டால் அது தமக்கு ஆபத்து என்பதை மிக தெளிவாக உணர்ந்துள்ளது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், அதன் முக்கிய அங்கமான சங் பரிவாரும்.

அதற்காகவே, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சர்ச்சையிலேயே மனத்தை செலுத்தி, மீண்டும் தமிழர்களை அடிமைகளாக மாற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்துகின்றன அந்த அமைப்புகள்.
அதை வெற்றிகரமாக சித்து முடிக்க, பிளவுபட்ட அதிமுகவின் ஒரு பிரிவுக்கு அக்கட்சி ஆதரவுக்கு கரம் நீட்டி வருகிறது.
அந்த அணியும், ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவதிலேயே தமது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் அது இன்னும் சத்தமாகவே ஓங்கி ஒலிக்கிறது.

இந்த உண்மையை, மக்கள் உணர்ந்து கொள்ளவில்லையெனில், அடிமை தளையில் இருந்து விடுபட முடியாது என்று அரசியல் உற்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதை கூறுவதன் மூலம், அதிமுகவின் மற்றொரு அணிக்கு ஆதரவளிப்பதாக எண்ணி விடக்கூடாது. இதைவிட அது மிக மிக ஆபத்தானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
