தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராகவும், ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் பாலகிருஷ்ண ரெட்டி. 1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையைத் தடை செய்யக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பொதுச் சொத்துகளை சேத படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை, விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார், அதோடு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், 3 ஆண்டுகால சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

நீதிமன்றத்தின் உத்தரவால் பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகள் பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றதால் பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோகும் எனவும் இதனால் அவரது தொகுதியான ஒசூர் தொகுதி காலியாகும் நிலை ஏற்படும் என்றும் நீதித் துறை மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்திற்குச் சென்று முதல்வரை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார் முதல்வர்.  அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்தார். இதையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ரெட்டியின் ராஜினாமா குறித்த முறையான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கொடுக்க உள்ளதாக தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.