தமிழகத்தில் நடைபெற்ற ராமலிங்கம், சசிகுமார், எஸ்.ஐ. வில்சன் படு கொலைகளில் தொடர்பிருப்பதாக எஸ்டிபிஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள/ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் படுகொலை செய்து விட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் எலப்புலி பகுதியை சேர்ந்தவர் பிரமுக் சஞ்ஜித். ஆர்.எஸ்.எஸ். தொண்டரான சஞ்சித் கடந்த 15-ம் தேதி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்தார். அப்போது, காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் மனைவியின் கண்முன்னே சஞ்ஜித்தை கொடூரமாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ அடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சார்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக பாஜக கூறியுள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கடந்த வாரம், கேரளாவில் மனைவியின் முன்னே 30 முறை வெட்டி படுகொலை செய்யப்பட்ட 27 வயது இளைஞர் சஞ்ஜித்தை கொன்ற கும்பல் தமிழகத்தின் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாத எஸ்டிபிஐ இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளார்கள் என்றும் கேரள காவல் துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகத்தில் கோவையில் விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் நடைபெற்ற ராமலிங்கம், சசிகுமார், எஸ்.ஐ. வில்சன் படு கொலைகளில் தொடர்பிருப்பதாக எஸ்டிபிஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள/ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் படுகொலை செய்து விட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, புகலிடமாக தமிழகம் மாறி விடக்கூடாது என்ற அக்கறையோடு காவல்துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
