தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவதாக சட்டப்பேரவை செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் 2-ம் தேதியன்று காலியாகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. திமுக, அதிமுகவுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தாமக தலைவர் வாசன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மேலும் 3 சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் பரிசீலனையில் 3 சுயேட்சைகளின் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாததால், அவர்களுடைய மனு தள்ளுபடியானது. எஞ்சிய 6 பேருடைய மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டணி கட்சியான தமாகாவைச் சேர்ந்த ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்நியூர் செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் மூலம் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-ஆக குறைய உள்ளது. அதேபோல, திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.