பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை போலீசார் ஓட ஓட துரத்துவதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை குறிப்பிட்ட ஒரு தெருவுக்குள் அனுமதிக்க மறுத்த காரணத்தினால் போலீசாருடன் ஹெச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது தான் உயர்நீதிமன்றத்தை கடும் சொல்லால் ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார். ஹெச்.ராஜா சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

 

சுமார் 3 நிமிட வீடியோ காட்சிகள் மட்டும் தான் வெளியாகியிருந்தன. உண்மையில் ராஜா அன்று உயர்நீதிமன்றத்தை மட்டும் கடுமையான சொற்களால் விமர்சிக்கவில்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டிஜிபி தி.மு.க தலைவர் ஸ்டாலின் என பலரையும் மிக கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார். அதிலும் விஜயபாஸ்கரை ஒருமையில் ஹெச்.ராஜா பேசியிருந்தார். மேலும் சி.பி.ஐ சோதனைக்கு உங்கள் டிஜிபி ஆளான நிலையில் காக்கி சட்டையை போட உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லை என்று போலீசாரை நோக்கி ஹெச்.ராஜா பேசியிருந்தார். மேலும் வெட்கமே இல்லாமல் லஞ்சம் வாங்குபவர் விஜயபாஸ்கர் என்றும் கூறியிருந்தார். 

இதே போல் தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் மாற்று மதத்தினருக்கு மட்டும் சலுகைகள் செய்பவர்கள் என்கிற ரீதியில் மோசனமா வார்த்தைகளால் ஏளனம் செய்திருந்தார். அதிலும் போலீசார் அனைவருமே கரப்ட், மாற்று மதத்தினரிடம் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் காசு வாங்குபவர்கள், போலீஸ்கார்கள் பெரும்பாலும் ஆன்ட்டி இந்துக்கள் என்றெல்லாம் சகட்டு மேனிக்கு பேசியிருந்தார். பொதுவாக விநாயகர் சதுத்ர்த்தி ஊர்வலம் சமயங்களில் எங்கெல்லாம் பிரச்சனை ஏற்படுமோ அங்கெல்லாம் செல்வது ராஜாவின் வழக்கம். ஒவ்வொரு வருடமும் இதே போன்று எங்காவது சென்று போலீசாருடன் ராஜா வாக்குவாதம் செய்வார்.

ஆனால் இந்த முறை உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் பேசியதால் ஹெச்.ராஜாவுக்கு சிக்கல் ஆகிவிட்டது. மேலும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை பிற்பகலிலேயே ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் கடுமையாக பேசியிருந்தார். ஆனால் வழக்கோ ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகே பதியப்பட்டது. 

இதற்கு சென்னையில் இருந்து புதுக்கோட்டை திருமயம் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் உடனடியாக ராஜாவை பிடித்து சிறையில் போடும்படியும் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சி.பி.ஐயை வைத்து டெல்லி அ.தி.மு.கவை மிரட்டி வரும் நிலையில் பா.ஜ.கவின் பிரமுகர் ஒருவரை கைது செய்து அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டி.ஜி.பி மற்றும் போலீசாரை மிக கேவலமாக பேசியதும் ஹெச்.ராஜா மீதான நடவடிக்கை தீவிரமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.