தமிழக புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசுக்கும் – மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

தற்போது தமிழக டிஜிபியாக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். இவரது பணிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. ஆனால் பணி நீட்டிப்பு பெற்று டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இவரது பணிக்காலம் முடிவடைந்த சமயத்தில் புதிய டிஜிபி யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது எடப்பாடி அரசு பிடிவாதமாக ராஜேந்திரன் பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்து அவரையே டிஜிபியாக தொடர வைத்தது. அந்த சமயத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இறுதியில் எடப்பாடி தனது டெல்லி தொடர்புகள் மூலமாக ராஜேந்திரனை டிஜிபி பதவியில் தொடர வைத்தார்.

ஆனால், இந்த முறை அப்படி செய்ய வைக்க முடியாது. மேலும் குட்கா உள்ளிட்ட சில விவகாரங்களில் ராஜேந்திரன் பெயர் அடிபடுகிறது. அவரது வீட்டிலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனவே புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி அரசுக்கு உள்ளது. வரும் 30ந் தேதியுடன் ராஜேந்திரன் பதவிக் காலம் நிறைவடைகிறது. 

எனவே அதற்குள் புதிய டிஜிபியை எடப்பாடி அரசு நியமிக்க வேண்டும். அதன்படி தற்போது டிஜிபியாகும தகுதியுடன் ஜாபர் சேட் மற்றும் ஜே.கே. திரிபாதி ஆகியோர் பெயர்கள் தான் முன்னிலையில் உள்ளன. இவர்களில் ஜாபர் சேட்டுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை டிஜிபியாக்க உள்துறை செயலாளர் மற்றும் தற்போதைய டிஜிபி டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

ஆனால் பணிக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கூட ஜாபர்சேட் ஆளாகியுள்ளார். மேலும் அவர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. கனிமொழியுடன் இவர் 2ஜி தொடர்பாக பேசி வெளியான ஆடியோ அப்போதைய திமுக அரசை ஆட்டிப் பார்த்தது.

 

இப்படி பல்வேறு புகார்களுக்கு ஆளான ஜாபர் சேட்டை டிஜிபியாக நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முட்டுக்கட்டை போடுகிறது. அதே சமயம் ஜே.கே.திரிபாதி தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் பிடிவாதம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் திரிபாதி திமுக அனுதாபி என்று எடப்பாடி டென்சனில் இருக்கிறார்.

இதனால் கடந்த முறையை போலவே இந்த முறையும் டிஜிபி நியமன விவகாரத்தில் மத்திய அரசுடன் எடப்பாடி மோதிப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.