இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர், கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் மூத்திரம் பெய்து அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகின; 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கிற செயல் ஆகும். இவர், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாஜக மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும், சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு வந்து திணித்து வருகிறது. அவர்களும், முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர்குலைத்து வருகிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகின்றேன்.” என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் எய்ம்ஸ் குழுவில் எம்.பி.க்கள்  நியமனத்தை காலி இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், ரவிக்குமார் உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.