Tamil Nadu ministers who are opposing the federal government Alert is the AIADMK
தமிழகதிற்கான நிதியை முறையாக ஒதுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்த நிலையில், தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிங்களுக்கு இடையேயான வரி வசூலிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய நிதிக்குழு கவனித்து வருகிறது. இதுவரை 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வது நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதிக்குழுவை அமைத்தது.
இந்தக் குழு நிதிப் பகிர்வில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக, இனி 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வு செய்யப்படும் என அறிவித்தது.
2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கும் திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக போராட தென் மாநிலங்களுக்கு கர்நாடகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிதி பகிர்வு உயர்ந்தாலும் தமிழகத்துக்கான வருவாய் சரியாக கிடைக்கவில்லை எனவும் ரூ.20,000 கோடி வரை தமிழகத்துக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துருந்தார்.
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தமிழகத்திற்கு 54,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவைப்படுவதாகவும் ஆனால் 17,900 கிலோ லிட்டர் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது எனவும் காமராஜ் தெரிவித்தார்.
