தற்போது முதல்வர் பதவி ஒன்றேதான் லட்சியம் என்ற கனவோடு மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநெல்வேலி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 “ நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அப்படி கூட்டணி அமைத்தும் 90 இடங்களைத்தான் திமுக வெற்றி பெற்றது. ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமலும் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது முதல்வர் பதவி ஒன்றேதான் லட்சியம் என்ற கனவோடு மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் கனவு கனவாகவே இருக்கும்.
தமிழகத்தில்  பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இது மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் தெரியவில்லை. இது தெரியவில்லை என்று அவர் சொன்னால், எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கே அவருக்கு தகுதி இல்லை என்றுதான் அர்த்தம்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு வேறு மாதிரி அமைந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்பினர். அந்த எண்ணத்தில்தான் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். அதை மு.க. ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் நடக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்  நிச்சயமாக நடைபெறும். அந்தத் தேர்தலில் 100  சதவீதம் அதிமுக வெற்றி பெறும்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.