முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்திப் பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு கொழுப்பு பேரிய பேச்சு என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கடுமையாக சாடியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என்றும், தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட ராஜீவ்காந்தியை கொன்றவர்களை  தமிழ்ச்சமூகத்தின்  வரலாறு போற்றி வணங்கும் என்பதுபோல அவர் பேசி இருந்தார்.  அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் சீமானின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சீமானை பொரிந்து தள்ளியுள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார்.

அப்போது, சீமான் என்ன யோக்கியமா என்று கேள்வி எழுப்பி ராஜேந்திர பாலாஜி, தான்  குடியிருந்த  வீட்டிற்கு கூட பத்து ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் வக்கில்லாதவர்தான் சீமான் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.  ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்களையும் ரவுடிகளையும் வைத்து சீமான் கட்சி நடத்துவதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.  ஈழப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர்,  தமிழகத்தில் வைகோ ஒருவருக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கிறது எனவும் அப்போது கூறினார்.