தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (29.8.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அவர் உரையாற்றினார் அதன் முழு விவரம்:- 

கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பபட்டுள்ளன. இதுவரை, எனது தலைமையில் 9 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளன. தலைமைச் செயலர் அவர்கள், 11 முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும்,  RTPCR சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொண்டும் வருகிறோம். 

தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77,223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26,801 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஐசியு வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கோவிட் தொற்று சிகிச்சைக்காக 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள்,அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார்75,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தனியார் மையங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணங் களை அரசே நிர்ணயித்துள்ளது. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப்(Tocilizumab)400 எம்ஜி, ரெம்டெஸ்விர் (Remdesvir)100 எம்ஜி, இனாக்சபெரின் (Enoxaparin)40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், 

பரிசோதனை கருவிகள், N95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், CTஸ்கேன், X-ray இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்துவருகின்றது. களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும்,(zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ (Ayush) சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 85.45 சதவிதம் மேல் உள்ள
மாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.7 சதவிதம் இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.