உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு! செயலிழந்த உளவுத்துறை! ராமதாஸ் விளாசல்!
போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டின் பாம்பன் நகரிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக நாட்டுப் படகில் கடத்தப்பட்ட ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ எடை கொண்ட ஹாசிஷ் எனப்படும் போதைப் பொருளை மண்டபத்தை ஒட்டிய நடுக்கடலில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறையினரும், கடலோரக் காவல்படையினரும் இணைந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கிறது.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்.. அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது? எத்தனை தொகுதிகள் தெரியுமா?
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்படுவதாகவும், இங்கிருந்து இலங்கை வழியாக உலகின் பல நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை கூறியிருப்பது பல்வேறு செய்திகளை நமக்கு சொல்கின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்பது தான் அவற்றில் முதன்மைச் செய்தியாகும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலும், தமிழகத்தையொட்டிய கடல் பகுதியிலும் கடந்த சில நாட்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மத்திய அமைப்புகள் தான் செய்துள்ளனவே தவிர, இதில் மாநில அமைப்புகளின் பங்களிப்பு சிறிதும் இல்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்டு, இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவை மத்திய அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழக காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் இது குறித்து எதுவுமே தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகள் செயலிழந்து விட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன என்று தான் கருத வேண்டியிருக்கிறது. இது கவலையளிக்கக் கூடியதாகும்.
இதையும் படிங்க: 15 மாதங்களில் 4 முறை! அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்றாததால் வீட்டு வசதித்துறை செயலாளர்கள் இடமாற்றமா? அன்புமணி
மது போதையும், கஞ்சா போதையும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்தக்கட்டமாக பன்னாட்டு போதைப் பொருட்களும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.