ஒருபக்கம் மக்கள் கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து பசி, பட்டினியோடு வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகிறார்கள் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கடந்த ஜனவரி 30 அன்று கேரள மாநிலத்தில் அறியப்பட்டதில் இருந்து அதன் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. 1,771 பேர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். 130 கோடி மக்களில் எவரும் கொரோனா நோயின் அச்சம், பீதியில் இருந்து இதுவரை விடுபடவில்லை. மக்கள் ஊரடங்கினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா நோயைக் கண்டறிய தரமான உரிய பரிசோதனைக் கருவிகளைக் கூட மத்திய அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை. உரிய பரிசோதனை செய்ய வசதி இல்லாத காரணத்தால் கொரோனாவின் பாதிப்பை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

ஒருபக்கம் மக்கள் கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து பசி, பட்டினியோடு வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகிறார்கள். இத்தகைய அவலநிலையில் இருந்து மக்களை மீட்பதற்கு இதுவரை மத்திய பாஜக அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நிதியை ஒதுக்கியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதமான 2 டிரில்லியன் டாலர், அதாவது ரூ.148 லட்சம் கோடியை ஒதுக்கி கரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மைய அறிவிப்பின்படி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 40 கோடியே 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.

ஆனால், கடந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 30 கோடியே 96 லட்சமாக குறைந்து, ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 20 கோடியே 82 லட்சமாக பெரும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதன்படி, 10 கோடியே 22 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும் அடங்குவர். இதில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் அடங்கும். கடந்த ஏப்ரலில் வேலைவாய்ப்பு குறைவாகப் பெற்ற மாநிலமாக கேரளம் இருந்தது. தற்போது அந்த இடத்துக்குத் தமிழ்நாடு வந்துள்ளது. இத்தகைய பொருளாதாரப் பேரழிவில் தமிழ்நாடு மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் வேலை இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. மேலும், மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு இழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மதிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 80 லட்சம் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்த இவர்களது மொத்த வருமானம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.

இந்தியா எதிர்கொண்டுள்ள இத்தகைய பொருளாதாரப் பேரழிவில் இருந்து மக்களை மீட்பதற்கு மத்திய பாஜக அரசின் அணுகுமுறை என்ன? பாதிக்கப்பட்ட தொழில்கள், வர்த்தகம் திரும்பத் தொடங்குவதற்கு பொருளாதார ஊக்க நடவடிக்கையாக எத்தகைய திட்டத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை. பெரிய நிறுவனங்களில் இருந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இதனுடைய பொருளாதார அடித்தளமே நொறுங்கிப்போயிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் ஏழை, எளியோர்களாக இருப்பதால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்கள் கையில் நேரடியாக பணம் சேருகிற வகையில் மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும்.

 

அதேபோல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் தாங்கள் பெற்ற வங்கிக் கடனுக்குச் செலுத்த வேண்டிய மூன்று மாதங்களுக்கான கடன் தவணை வட்டியுடன் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக தள்ளுபடி செய்தால் தான் மீண்டும் தொழில் தொடங்க முடியும். எனவே பொருளாதாரப் பேரழிவில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். முதல் கட்டமாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடியை ஒதுக்கி பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மீண்டும் தங்கள் தொழில்களைத் தொடங்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.